அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு….
அதிவேக நெடுஞ்சாலைகளில் அலுவலக நேரங்களில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன்பெர்ணான்டோ தெரிவித்தார்.
நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் உள்ள கட்டண கூடங்களில் கைகளினால் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் போது காசாளர் டிக்கெட்டை ஒப்படைக்க சுமார் 12-15 வினாடிகள் செல்கிறது. இலத்திரணியல் கட்டண முறையைப் பயன்படுத்தும் போது 6 வினாடிகளில் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வாகனங்களுக்கு வெளியேற முடியும். எனவே நெடுஞ்சாலை பயனாளர்கள் முற்கொடுப்பனவு அட்டை முறையைப் பயன்படுத்துமாறு அமைச்சர் கோரினார். இந்த அட்டையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நெடுஞ்சாலைகளின் வெளியேறும் வாயில்களில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.
கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் மாத்திரம் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள இந்த மின்னணு கட்டண அறவீட்டு நிலையங்களை கெரவலப்பிட்டி உள்ளக பரிமாற்ற நிலையம் மற்றும் ஏனைய நெடுஞ்சாலைகள் என்பவற்றிலும் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது பல கட்டணச் கூடங்கள் மூடப்பட்டிருப்பதைக் கவனித்த அமைச்சர் , இதற்கு என்ன காரணம் என அதிகாரிகளிடம் வினவியுள்ளார்.
தற்போது நெடுஞ்சாலைகளில் உள்ள பணம் அறவிடும் கூடங்களில் பணியாற்ற காசாளர் பற்றாக்குறை இருப்பதாக நடவடிக்கை பணிப்பாளர் அமைச்சரிடம் தெரிவித்தார்.
நெடுஞ்சாலை திட்டங்களில் காசாளர்களாக நியமனம் பெற்று தேவைகளுக்கு அமைவாக பிரதேச அலுவலகங்களில் முகாமைத்துவ உதவியார்களாக பணிபுரியும் ஊழியர்களை நெடுஞ்சாலை செயல்பாட்டு முகாமைத்துவப் பிரிவுக்கு உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
நெடுஞ்சாலை செயல்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர்
ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிறி,வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன், அதிவேக நெடுஞ்சாலை செயற்பாட்டு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.