எரிபொருள் விலை தொடர்பாக தீவிரமாக ஆராயும் அரசு.
எரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்படுத்தாமல் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில், அரச மட்டத்தில் தீவிர கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்தாா்.
அவ்வாறு, இல்லாவிட்டால் எரிபொருள் கூட்டுத்தாபனம் சந்திக்கும் நட்டத்தை எவ்வாறு சரிசெய்வது, அதற்கு எவ்வாறான முயற்சிகளை எடுப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினாா்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படுவதை யாராலும் முகாமைத்துவம் செய்ய முடியாது. எரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்படுத்தாவிட்டால் ஏதாவது நிவாரணத்தை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு இருப்பதாக தெரிவித்த அவர், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எதிர்பார்த்த அளவுக்கும் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொண்டோம். அதேபோன்று, எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து நுகர்வோரும் எரிபொருளை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டாா்.
LIOC நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதுதொடர்பில் அவர்கள் இன்னும் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவுமில்லை. அவ்வாறு எதுவும் இடம்பெறபோவதுமில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதால் மாறுபட்ட ரீதியில் இதனை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தாா்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.