டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்திடம் வீழ்ந்தது வங்கதேசம்!

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கிறிஸ் கிரீவ்ஸின் சிறப்பான அட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்களைச் சேர்த்தார். வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ், சௌமியா சர்கார் தலா 5 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஷாகிப் அல் ஹசனும் 20 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த முஷ்பிக்கூர் ரஹீம் – மஹ்மதுல்லா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. பின் முஷ்பிக்கூர் 38 ரன்னிலும், மஹ்மதுல்லா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, வங்கதேசத்தின் தோல்வி உறுதியானது.
இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் பிராட்லி வீல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது.