விசேட சுற்றிவளைப்புகளில் 9 பேர் சிக்கினர்!
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மதுமபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 34 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு பாணமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாஸிதிவெல பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட நால்வரைப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர். 40, 22, 18, 38 வயதுகளையுடைய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கொழும்பு, தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு கிராம் 242 மில்லிகிராம் கேரள கஞ்சாவுடன் மொரட்டுவைப் பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஒரு இலட்சத்து 94 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருணோதய மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிராம் 180 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஓட்டோ ஒன்றில் பயணித்த இருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். இராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 20, 22 வயதுகளையுடைய நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.