புலிகளுடன் இணைந்து செயற்பட்டவரே ஜோசப் ஸ்டாலின்! டிலான் குற்றச்சாட்டு.

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்.”

– இவ்வாறு விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.

அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது இராணுவத்தினர் மக்களைக் கொன்றனர் எனக் குறிப்பிட்டு, யாழ்ப்பாணத்துக்குச் சென்று புலிகளுடன் இணைந்து போராடியவர்தான் ஜோசப் ஸ்டாலின். அவர் புலிகளின் கட்சியைச் சேர்ந்தவர்.

அடுத்ததாக மஹிந்த ஜயசிங்க என்பவர் ஜே.வி.பியின் முழு நேர அரசியல் செயற்பாட்டாளர். இவர்கள்தான் கல்விக் கட்டமைப்பைக் குழப்புகின்றனர்” – என்றார்.

அதேவேளை, “பாடசாலைகளின் சாவிகளை ஒப்படைக்குமாறு அதிபர்களுக்கு, பொலிஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்க முடியாது. வலயக்கல்விப் பணிப்பாளர் தீர்மானமொன்ற எடுக்கும்வரை அதனை ஒப்படைக்கமாட்டோம்” என்று அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.