கேன்சர் எண்ணெய் விற்றால் பல கோடி லாபம் கிடைக்கும் – தேனி சாமியாரை ஏமாற்றிய நைஜீரியா கும்பல்
கேன்சர் எண்ணெய் விற்றால் பல கோடி லாபம் கிடைக்கும் என வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தேனியை சேர்ந்த சாமியாரிடம் மூன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான்குளம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் சுவாமி ரிதம்பரநந்தா(48). சாமியாரான இவருக்கு கடந்த மே மாதம் வாட்ஸ் – அப் அழைப்பு மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் நான் சோபியா கிரேஸ், இங்கிலாந்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் வணிக பிரிவு மேலாளராக உள்ளேன். எங்களுக்கு புற்றுநோய் குணப்படுத்துவதற்கான மூலப்பொருள் எண்ணெய் (Zolgesma oil solution) தேவைப்படுகிறது.
அதனை இங்கிலாந்தில் கொள்முதல் செய்தால் ஒரு லிட்டர் எண்ணெய்யின் மதிப்பு 7,500 அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால் இந்தியாவில் புனே நகரில் உள்ள டாக்டர் கருணா என்பவரிடம் 4,800டாலருக்கு அந்த மூலப்பொருள் எண்ணெய் கிடைக்கிறது. எனவே அவரிடம் இருந்து 2லிட்டர் அளவில் எண்ணெய் வாங்கிக் கொடுத்தால் உங்களுக்கு கமிஷன் தரப்படும். இதற்காக எங்கள் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஹாரிஷன் என்பவரை டெல்லிக்கு அனுப்பியிருப்பதாகவும், அவரிடம் மூலப்பொருள் எண்ணெய் கொடுத்தால், அதன் தரத்தை பரிசோதித்து பெற்றுக் கொள்வார்.
தொடர்ந்து இது போன்று மூலப்பொருள் எண்ணெய் வாங்கிக் கொடுத்தால் கூடுதலாக ஆயிரம் லிட்டர் வரையில் ஆர்டர் தருவதாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் உங்களுக்கு லாபம் கிடைக்கும் எனக்குறிப்பிட்டு இருந்தார். அதில் மயங்கிய சுவாமி ரிதம்பரநந்தா, அவர் தெரிவித்தபடி ரூபாய் மூன்றரை லட்சம் பணம் செலுத்தி கூரியர் மூலம் புனேயில் இருந்து 2லிட்டர் எண்ணெய் வாங்கியுள்ளார். பின்னர் டெல்லி சென்று டாக்டர் ஹாரிஷனிடம் 2லிட்டர் எண்ணெயை கொடுத்துள்ளார்.
அதன் தரத்தை பரிசோதித்து பெற்றுக் கொண்ட ஹாரிஷன், கூடுதலாக 23லிட்டர் தேவைப்படுகிறது. அவற்றை வாங்கித்தந்தால் தான் உங்களுக்கு ஆயிரம் லிட்டர் கொள்முதலுக்கான ஆர்டர் தருவதாகக் கூறி திருப்பி அனுப்பியுள்ளார். பின்னர் ரிதம்பரநந்தாவால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த ரிதம்பரநந்தா தேனி சைபர் க்ரைம் போலீசில் கடந்த மாதம் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் ரிதம்பரநந்தாவை தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணின் ஐ.பி. அட்ரஸை வைத்து ட்ராக் செய்ததில், மும்பையில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் குற்றவாளிகளை பிடிப்பதற்கு தேனி சைபர் க்ரைம் ஆய்வாளர் அறங்கநாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த வாரம் மும்பை சென்றனர். அங்கு நடத்தப்பட்ட தேடுதலில், ரிதம்பரநந்தாவை தொடர்பு கொண்ட எண்ணானது நைஜீரியாவைச் சேர்ந்த ஓலன்மேத்யூ(43) என்பவருடையது எனத் தெரியவந்ததால் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3அலைபேசிகள், லேப்டாப்கள், 2மோடம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து மும்பையில் இருந்து நைஜீரியா ஓலன்மேத்யூவை தேனிக்கு அழைத்து வந்த சைபர் க்ரைம் போலீசார், அவரிடம் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்துக்கான எண்ணெய் வாங்கி தந்தால் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கலாம் என நூதன முறையில் நடந்துள்ள மோசடி சம்பவம் தேனி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.