ஆசிரியர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லாமல் பாடசாலைகளை மீளத் திறப்பது நியாயமா?

“மிக நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஒரு சாதகமான தீர்வை முன்வைக்காது பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான தீர்மானத்தை அரசு எடுத்துள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ரஜித கொடித்துவக்கு தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடு துர்ப்பாக்கிய நிலைமைக்குச் சென்றுகொண்டிருக்கின்றது. விசேடமாக எதிர்வரும் 21ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்டளவில் பாடசாலைகளைத் திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் அரசிடம் ஒன்றை நாம் கேட்க விளைகின்றோம்.

அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளாமல், பாடசாலைகளை மீளத் திறப்பதற்குத் தீர்மானித்திருந்தால் இந்தப் பிரச்சினை மீண்டும் இருந்த இடத்துக்கே செல்லும் என்பதை நாம் நினைவூட்ட விரும்புகின்றோம்.

சேவையிலுள்ள ஆசிரியர்களுக்குப் பதிலாக அரசானது பயிற்சி பெற்ற ஆசிரியர்களை சேவைக்கு அமர்த்தி கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்திருந்தால் அது நாட்டின் கல்வி முறைமை இல்லை என்பதே எமது கருத்து.

அதேபோன்று அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்காது அதற்குப் பதிலாக சகல விடயங்களிலும் இராணுவத்தினரை உள்ளீர்ப்பதைப் போன்று ஆசிரியர்கள் இல்லாவிட்டால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அழைத்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முயற்சித்தால் அது அரச நிர்வாகம் இல்லை என்றே கூற வேண்டும்.

பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கு முயற்சிக்காது பிரச்சினைகளைச் சரியாக இனங்கண்டு அதற்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கமாறு அரசைக் கோருகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.