பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் கலந்துரையாடல்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கொவிட் நிலைமைகள் தொடர்பிலும் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
மாவட்டத்தின் கொவிட் பரவல் நிலைமைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தொற்றுநோயியலாளர் நிமால் அருமைநாதன் அவர்கள் தடுப்பூசியின் பயனாகவே இந்நிலைமை சாத்தியமானதாகவும் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு கொவிட் பரிசோதனை செய்யும் வீதத்தினை இதுவரையில் குறைக்காத வகையில் மாவட்டத்தின் 15 நிலையங்களிலும் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுவதனால் தொற்றுக்குள்ளாகின்ற நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளமையினை அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கவுள்ளதனால் எதிர்வரும் 21 ம் திகதியிலிருந்து 18, 19 வயதுப்பிரிவினருக்கு பைசர் தடுப்பூசியினை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன்பிரகாரம் 4200 மாணவர்களின் விபரங்களில் முதற்கட்டமாக 2500 மாணவர்களுக்கான தடுப்பூசிகளினை ஒரு கிழமைக்குள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தொற்றுநோயியலாளர் நிமால் அருமைநாதன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து மாவட்டத்தில் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்களது விபரங்கள் முரண்பாடற்றவையாக முழுமையானவகையில் பூரணப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களை அரசாங்க அதிபர் அவர்கள் கேட்டுக்கொண்டதோடு தடுப்பூசி பெறாதவர்களுக்கான விழிப்பூட்டல் செயற்பாடுகளையும் முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான நிவாரண வழங்கல் தொடர்பில் உள்ள நிலைமைகள் ஆராயப்பட்டன. பொதுச்சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பொலீசாரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன.தொடர்ந்து பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன. அந்த வகையில் 200க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை எதிர்வரும் 21ம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உள நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மாணவர்களுக்கு ”மகிழ்வான ஆரம்பம்” என்ற வகையில் முதலாவதாக கற்றல் செயற்பாடுகளுக்கு முழுமையாக ஈடுபடுத்தாது மகிழ்வான இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் வகையில் செயற்பட ஆலோசனைகளும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் வகையில் அறிவுறுத்தல்களும் கலந்துரையாடலில் வழங்கப்பட்டிருந்தன.
இக்கலந்துரையாடலில் மாவட்டச்செயலக அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள், சுகாதாரதுறை அதிகாரிகள், கல்வித்திணைக்கள அதிகாரிகள்,பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச்செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.