முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் இல்லத்தில் இருந்து ஆவணங்களை அள்ளிச்சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை!
கோவையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்தின் இல்லத்தில் நடைபெற்ற சோதனை இரவு 9.40 மணிக்கு நிறைவடைந்தது. 15 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்தின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று காலை 6:30 மணிக்கு சோதனையை தொடங்கினர். இந்த சோதனையானது 15 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
சுந்தரம் வீட்டில் உள்ள நகைகளை நகை மதிப்பீட்டாளர் கொண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த தங்க நகைகளை அளவீடு செய்யும் பணியானது நடைபெற்றது. வீட்டின் மொட்டைமாடி மற்றும் சுந்தரத்தின் பென்ஸ் ரக கார் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது.
கோவை லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 8 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 6.30 மணிக்கு துவங்கிய சோதனை இரவு 9.40 மணிக்கு நிறைவடைந்தது.
சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தஇந்த சோதனையில் சுந்தரம் வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். இதே போல கோவை பீளமேடு பகுதியில் சுந்தரம் பங்குதாரராக இருக்கும் தனியார் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையானது நடத்தப்பட்டது. இங்கிருந்தும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய ஆய்வில் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி குவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் விஜயபாஸ்கர், அவரது தந்தை, மாமனார், சகோதரர், சகோதரி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். புதுக்கோட்டை, திருச்சி, சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 48 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய இரு இடங்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இரு வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இதையொட்டி அடுக்குமாடி குடியிருப்புகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படிருந்தனர். விஜயபாஸ்கரின் சகோதரர் நடத்தி வரும் மதர் தெரசா அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் உள்ள 14 கல்வி நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஒரு கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள வீட்டில் நடைபெற்ற சோதனை மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது. அங்கு 4 கிலோ 800 கிராம் தங்கம், 3 கிலோ 780 கிராம் வெள்ளி, 23 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சென்னையில் உள்ள இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவித்தார். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பணமோ அல்லது சொத்து ஆவணங்களோ பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.