வடக்கு மாகாணத்தில் பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை.
கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைசர் தடுப்பூசியானது நாடுமுழுவதும் ஓக்டோபர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது. இதன்படி வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்பட உள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கும் அவர்களது பாடசாலைகளிலேயே இத்தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் பாடசாலையைவிட்டு விலகிய 18, 19 வயதுடையவர்களுக்கு அவர்களுடைய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளில் சனிக்கிழமைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்படும்.
தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைகளிலும் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 23, 30ஆம் திகதி சனிக்கிழமைகளில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.