புதிய அரசமைப்புக்கான வரைவை ‘மொட்டு’த் தரப்பே இறுதிப்படுத்தும்! சாகர எம்.பி.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் சகல கட்சிகளின் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்னமும் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை என்று பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பரிந்துரைகள் முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சகல தரப்பினதும் கருத்துக்களை பரிந்துரைகளையும் கவனத்தில்கொண்டு இறுதியாக எவ்வாறான அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை அரசும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான தரப்பினரும் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியாக உள்ளார். வெகு விரைவில் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும். இது குறித்த கலந்துரையாடல்கள் அரசிலும் அமைச்சரவையிலும் ஏனைய மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளன” என்று அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்த எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் ஆரம்ப வரைபையும் கட்சிகளின் பரிந்துரைகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் முன்வைக்க அரசு நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என அறியமுடிகின்றது.