ஓமனை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற 6ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வங்கதேசம் – ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முகமது நைம், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால், 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக முகமது நைம் 64 ரன்களையும், ஷாகிப் அல் ஹசன் 42 ரன்களையும் சேர்த்தனர். ஓமன் அணி தரப்பில் ஃபையாஸ் பட், பிலால் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஓமன் அணி ஆரம்பத்திலேயே அகிப் இலியாஸ், பிரஜபதி, மஹ்சூத் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜதிந்தர் சிங் 40 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 20 ஓவர்களில் ஓமன் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் முஸ்தபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி, டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்தது.