பேஸ்புக் பெயரை மாற்றுவதற்கு, தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்
பேஸ்புக் பெயரை மாற்றுவதற்கு, தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களின் ராஜாவாக விளங்கக் கூடியது ஃபேஸ்புக் நிறுவனம். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவை கூட ஃபேஸ்புக்கின் துணை நிறுவனங்களே. இந்தியாவில் முன்னர் ஆர்குட் என்ற சமூக வலைத்தளமே பிரதானமாக இருந்தது, ஆனால் பேஸ்புக்கின் அறிமுகத்துக்கு பின்னர் ஆர்குட் மூடுவிழா கண்டது. ஆரம்பம் தொட்டே சமூக வலைத்தளங்களின் கிங் ஆக பேஸ்புக் விளங்கி வருகிறது.
அதே நேரத்தில் சமீப காலங்களில் பேஸ்புக் நிறுவனம் பல்வேறு சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. குறிப்பாக அந்நிறுவனத்தின் செயல்பாடுகளால் அமெரிக்காவில் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
இதனிடையே ஃபேஸ்புக்கின் பெயரை மாற்ற அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் புதிய பெயரில் ரீபிராண்டிங் செய்யப்படும் எனவும், ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் அதனுடைய ஒரேயொரு மொபைல் ஆப்பில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஓகலஸ் உள்ளிட்ட பிற புரோடக்ட்கள் கிடைக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தி வெர்ஜ் என்ற இதழில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, வரும் அக்டோபர் 28ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஃபேஸ்புக்கின் வருடாந்திர கான்ஃபரன்ஸில் மார்க் ஸக்கர்பர்க் இது குறித்து பேசக்கூடும் எனவும், ஆனால் அதற்கு முன்னரே அடுத்த வாரத்தில் கூட ஃபேஸ்புக்கின் புதிய பெயர் வெளியாகலாம் எனவும் ஃபேஸ்புக் நிறுவன தகவல்களின் அடிப்படையில் தி வெர்ஜ் தெரிவித்துள்ளது.
ஆனால், யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என ஃபேஸ்புக் மறுத்துள்ளது. மேலும் பெயரை மாற்றுவதால் அது பேஸ்புக்கிற்கு பிரச்னையை தான் ஏற்படுத்தும் என கூறுகின்றனர்.