உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை காவலில் உயிரிழந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி காவல்துறையினரால் கைது!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அருண் வால்மீகி என்ற இளைஞர், அம்மாநில காவல்நிலையம் ஒன்றின் ஆதாரங்களைச் சேகரித்து வைக்கும் கட்டிடத்தில் துப்புரவுப் பணியாளராக இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அவர் அந்த கட்டிடத்திலிருந்து 25 லட்சத்தைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டி உத்தரப்பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார். காவல்துறையினரின் விசாரணையில் இருந்த வால்மீகி மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டார்.
இந்த விவகாரம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ‘வால்மீகி திருடிய பணத்தை அவரது வீட்டில் நேற்று இரவு சோதனை செய்யும்போது வால்மீகிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்டுத்தியது.
இந்தநிலையில், உயிரிழந்த துப்புரவு பணியாளர் வால்மீகியின் குடும்பத்தினரைச் சந்திக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார். உயிரிழந்த துப்பரவு பணியாளரின் வீடு உள்ள பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று லக்னோ – ஆக்ரோ தேசிய விரைவுச் சாலை வழியாக ஆக்ராவுக்கு செல்லும்போது பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்த தெரிவித்த பிரியங்கா காந்தி, ‘நான் ஆக்ராவுக்கு செல்லக் கூடாது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நான் எங்கு சென்றாலும் என்னைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
நான் உணவகங்களில் அமைதியாக உட்கார வேண்டுமா? அது அவர்களுக்கு அரசியல்ரீதியாக பலனுள்ளதாக இருக்குமா? நான் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும். என்னுடைய கட்சி அலுவலகத்தைத் தவிர வேறு எங்கு நான் சென்றாலும் அரசு என்னைத் தடுக்கிறது. இது பொதுமக்களையும் பாதிக்கிறது’ என்று தெரிவித்தார். இது அரசியல்களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.