மாகாண சபைத் தேர்தல் எப்போது? – இப்போது கூற முடியாது என்கிறது அரசு.
மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை இப்போது உறுதியாகக் குறிப்பிட முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“தேர்தல் முறைமை தொடர்பில் பிரச்சினை இருக்கின்றது. குறிப்பாக 2017 இல் கடந்த அரசால் முன்வைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமானது, பல முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது. எனவே, முதலில் அதனைச் சரி செய்ய வேண்டும்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என நான்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
முழு இலங்கையும் ஒரு தொகுதியாக கருதப்பட்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுகின்றது. உலகளவில் இந்த முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலானது முழுமையாக விகிதாசார முறைமையின் கீழ் இடம்பெறுகின்றது. கடந்த அரசால் முன்வைக்கப்பட்ட திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை 50 இற்கு 50 என்ற அடிப்படையில் விகிசாதார மற்றும் கலப்பு முறையில் நடத்துவதற்கு ஏற்பாடு இடம்பெற்றது. அதேபோல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை 60 இற்கு (தொகுதி) 40 (விகிதாசாரம்) என்ற வகையில் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நான்கு தேர்தல்களும் இவ்வாறு நான்கு விதத்தில் நடத்தப்படுகின்றமை நகைச்சுவைத்தனமாகும். எனவேதான் தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
ஜே.ஆர். ஜயவர்தனவால் முன்வைக்கப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறைமையில் சில சாதகமான விடயங்களும் உள்ளன. அதனை நாம் மறந்துவிட முடியாது. குறிப்பாக சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது. இது வரவேற்கக்கூடிய விடயம். எனவே, விகிசாதாரத் தேர்தல் முறைமையிலுள்ள சாதகமான விடயங்களைப் பாதுகாத்துக்கொண்டு தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்படும்.
அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை இப்போது உறுதியாகக் குறிப்பிட முடியாது.
தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடும். இவ்வருடத்துக்குள் அதனைச் செய்யமுடியாது.” – என்றார்.