நீதிக்கான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தாதீர்! – அரசிடம் மைத்திரி வலியுறுத்து.

“ஆசிரியர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் நீதிக்கான போராட்டங்களை அரசிலுள்ள எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் நாம் முன்வைத்துள்ளோம்
முன்னைய ஆட்சியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தத் தான் முயற்சிகளை எடுத்தும் ஏனையவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.
நாட்டின் நிகழ்கால அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் குறித்து எம்மால் திருப்தியடைய முடியாதுள்ளது.
நாட்டு மக்கள் தமது அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்கள் தமக்கான நியாயம் கேட்டு போராடுகின்றனர். விவசாயிகள் உரம் தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மரக்கறி உற்பத்தியாளர்கள் தமது விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை எனக் கவலைப்படுகின்றனர்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமக்கான கொடுப்பனவுகள் வேண்டும் எனக் கேட்டு நிற்கின்றனர். மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அரசு இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும். நாமும் ஆளும் கட்சிக்குள் இருக்கும் முக்கிய பங்காளிக் கட்சியாக அரசுக்கு நிலைமைகளை எடுத்துக்கூறி வருகின்றோம்” – என்றார்.