இலங்கையில் நல்லிணக்கம்: பிரான்ஸின் விருப்பம் இதுவே அந்நாட்டுத் தூதர் தெரிவிப்பு.

“இலங்கையில் நல்லிணக்கம் நிலவ வேண்டும். இதற்குப் பிரான்ஸ் தன்னாலான ஒத்துழைப்புக்களை வழங்கும்.”
இவ்வாறு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தபோது தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பலதரப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை இரு தரப்பினரும் வரவேற்றதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர் என்று வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, இருதரப்பு வர்த்தக விரிவாக்கம், முதலீடு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் கொழும்பு மற்றும் பாரிஸுக்கு இடையேயான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டத்தை இருவரும் வரவேற்றுள்ளனர்.