எஸ்.ரி.எப்பின் சுற்றிவளைப்பில் 13 பேர் சிக்கினார்கள்!
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக 8 மதுபான சுற்றிவளைப்புகளில் எண்மர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 203 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 571 லீற்றர் கோடா, ஆறு செப்புத் தகடுகள், இரண்டு எரிவாயு அடுப்புகள், ஒரு எரிவாயு அடுப்பு என்பவற்றையும் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 240 புகைத்தல் பொருட்களுடன் கொட்டுகொட பிரதேசத்தை சேர்ந்த 54 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குருநாகல், பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாரளுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாரளுவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி, உடவளவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனஹடுவ வாவிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப் பத்திரமின்றி பல்வேறு வகையான மரப்பலகைளுடன் பயணித்த டிரக்டரை வழிமறித்து சோதனையிட்ட பொலிஸார் பலகைகளுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். பல்லேபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், கருவலகஸ்வௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரியன்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திமின்றி மரம் அறுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 21, 47 வயதுகளையுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.