அருணாசல பிரதேச எல்லையில் விமான எதிர்ப்பு பீரங்கிகள்: சீனாவுக்கு இந்தியா பதிலடி
அருணாசல பிரதேச எல்லையில் சீனா படைகளைக் குவித்து வரும் நிலையில், எந்தவித சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தரம் உயர்த்தப்பட்ட எல்70 போர் விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் இந்தியாவும் தனது பலத்தை அதிகரித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அங்குள்ள பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்குக் கரைகள், கோக்ரா பகுதிகளில் இருந்து இரு நாட்டுப் படைகளும் திரும்பப் பெறப்பட்டன. ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட எஞ்சியுள்ள பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக தொடர்ந்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் அருணாசல பிரதேச மாநிலத்தின் யாங்கி என்ற பகுதிக்கு அருகே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்திய நிலப் பகுதிக்குள் 100 சீன ராணுவ வீரர்கள் அண்மையில் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த பிரச்னைக்குப் பிறகு, அருணாசல பிரதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லை முறையாக வரையறுக்கப்படாத இந்தப் பகுதியில் சீன ராணுவம் தனது ஆண்டுப் பயிற்சியை தற்போது தீவிரப்படுத்தியிருப்பதோடு படைகளையும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, எந்தவித சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவும் தனது படைபலத்தை வலுப்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில், ராணுவ வீரர்களின் தினசரி பயிற்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஏற்கெனவே எம்-777 பீரங்கிகள், ஸ்வீடனின் போஃபர்ஸ் பீரங்கிகளை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், இப்போது கூடுதலாக தரம் உயர்த்தப்பட்ட எல்70 போர் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து ராணுவத்தின் விமான பாதுகாப்புப் பிரிவு அதிகாரி சர்யா அப்பாசி கூறுகையில், “அருணாசல பிரதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உயர் மலைப் பகுதிகளில் இந்தத் தரம் உயர்த்தப்பட்ட எல்70 போர் விமான எதிர்ப்பு பீரங்கிகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணை எதிரி நாட்டு ஆளில்லா கண்காணிப்பு மற்றும் போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன போர் விமானங்களையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இந்த தரம் உயர்த்தப்பட்ட பீரங்கியில், நவீன சென்சார் தொழில்நுட்பம், லேசர் கண்காணிப்பு தொழில்நுட்பம், கேமரா மற்றும் ரேடார் உதவியுடன் இலக்கை தானியங்கி முறையில் கண்டறிந்து குறிபார்க்கும் திறனும், துல்லியமாக தாக்கி அழிக்கும் திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.