இலங்கையில் மீண்டுமொரு கொரோனா அலை அபாயம்!
கொரோனா பரிசோதனைகளைச் செயலிழக்கச் செய்வது மற்றும் எழுமாறான மாதிரிக்கான வழிகளைத் தடுப்பதன் மூலமும், நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் விமானப் பயணிகளின் பி.சி.ஆர். பரிசோதனைகளை முழுமையாக நிறுத்துவதன் மூலமும் மீண்டுமொரு கொரோனா அலை ஏற்படும் அபாயம் இருக்கின்றது எனச் சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா சமூகமயமாக்கல் தொடர்பில் சுகாதார அமைச்சு இன்னும் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை என்றாலும் நாடு சமூகமயமாக்கப்பட்ட தொற்றுநோயை எதிர்கொள்கின்றது.
விஞ்ஞான ரீதியிலான கண்காணிப்பு இல்லாமல் அதைக் கட்டுப்படுத்த முடியாது.
சில நிபுணர்கள் வேண்டுமென்றே கணிப்புகளுக்கான வழிகளைத் தடுத்துள்ளனர். மேலும் கொரோனா அலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டு வருகின்றது.
மற்றுமோர் அலை ஏற்பட்டால் அத்தகைய நிபுணர்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” – என்றார்.