நீண்ட மழைக்காலம் : ஜெகநாத் நடராஜன்
அங்கையற்கண்ணி வீட்டுக்குப் போவதென்று பால்வண்ணம் முடிவெடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். எப்படி அந்த முடிவை எடுத்தோம் என்று அவரே அவரைக் கேட்டுக் கொண்டார். சூழ்நிலை, விதி, வேறு வழியே இல்லை. ஏதாவது செய்தாக வேண்டும் என்றெல்லாம் காரணங்களைக் கற்பித்தாலும் அவர் மனதில் அங்கையற்கண்ணி இருந்தாள் என்பதுதான் உண்மை.. இக்கட்டான சூழலில் தனக்கு யார் உதவக் கூடும் என்று அவர் யோசித்த போது, நீர் ஊரும் கிணற்றில் மேலே வரும் சருகுகள் போல மிதந்து மேலே வந்தாள். அவரது .பள்ளிக்கால கனவு அவள்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவளைச் சந்தித்து, கடன் கேட்டு விட முடியுமா? போகும்போது அவள் வீட்டில் யாராவது இருப்பார்களா? அவர்களிடம் என்ன சொல்ல, என்றெல்லாம் யோசித்து, யோசித்துப் புரண்ட மனதை அவர் கவனித்துக் கொண்டே இருந்தார்.தைரியமாகக் குதித்து விட்டால் எப்படியாவது கரையேறிவிடலாம் என்று நினைத்தார். அவள் இல்லை என்றாலும் பரவாயில்லை. கேட்டோம் என்ற நிம்மதி கிடைக்கும் என்று அவருக்குத் தோன்றியது. இரண்டு முறை அவளைப் பார்க்கக் கிளம்பி, பாதி தூரம் வரை வந்து திரும்பிப் போய் விட்டார். ஏதோ தடுத்தது. அது கோழைத்தனம் என்று தன்னையே திட்டிக் கொண்டார்.
கடைசியாக, அங்கையற்கண்ணியை அவர் பார்த்தது ஒரு கல்யாணத்தில். அவசர அவசரமாக ஓடியவரின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெதுவா, மெதுவா என்ற குரல் கேட்டது. அவள்தான். பட்டுப்புடவை, கணக்கற்ற நகைகள், தலை ஒடிய மல்லிகைப் பூ. இத்தனையையும் மீறிய அவருக்கான புன்னகை. அந்த வயதிலும் அழகாகத்தான் இருந்தாள். அவரை விட ஒரு வயது சின்னவள். அவர் தன் வயதை யோசித்து அவள் வயதைக் கணக்கிட்டார். ஐம்பத்து நான்கு. மூன்று ஆண் பிள்ளைகள் அவளுக்கு. அனைவரும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள். சம்பாதித்துக் கொட்டுகிறார்கள். வீட்டுக்குமேல் வீடு. நிலத்துக்குமேல் நிலம், தோப்பு துறவு என்று விஸ்தரித்துக் கொண்டே போவதாகச் சொன்னார்கள். கூடவே ரொம்பவும் தெரிந்தவர்களுக்கு அவள் வட்டிக்குக் கடன் கொடுப்பதாக மிக நம்பிக்கையான ஆள் ஒருவன் அவரிடம் சொன்னான். அவளுக்கும் அவருக்கும் உள்ள சின்ன வயது நெருக்கம் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பின்னே பிறந்தவன்.
மூத்த மகள் கோமதி கல்யாணத்திற்குப் பேசியதில், இன்னும் மிச்ச மிருக்கும் ஆறு களஞ்சி தங்கத்தில் மூன்று களஞ்சியையாவது போட்டுவிட அவர் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தார். வரிசையாகப் பிறந்த மூன்று மகள்களில் முதல் மகளுக்கே இப்போதுதான் கல்யாணம் கூடி வந்திருக்கிறது.அதுவும் ஜாதகம் பார்க்கப் போகும்போது ரொம்பவும் யோசித்து, அவரது ஆயுள் ரேகை மங்கலாக இருக்கிறது என்று ஜோசியர் சொன்னதால்தான் அவர் மூத்தவளுக்கு உடனடியாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். உள்ளூர்க்கார மாப்பிள்ளைதான் . டெல்லியில் வேலை. பெண் கொடுக்க ஊரில் பலத்த அடிதடி நடந்தது.புதுப் பணக்காரர்கள் தங்கள் மகள்களுக்காக அடிப்போட்டார்கள். ஆனாலும், அதிர்ஷ்டம் அவர் மகள் கோமதி பக்கம் இருந்தது. மாப்பிள்ளைக்காரனுக்கும் அவரது அழகான மகளைப் பற்றி யாராவது சொல்லியிருக்கக் கூடும். மூத்தவளைக் கட்டிக் கொடுத்து, டெல்லிக்கு ரயிலேற்றி அனுப்பிவிட்டால், விட்டது பாடு என்று அடுத்த மகளைக் கவனிக்கலாம். முதல் கல்யாணம் முடிந்தால்தான் அடுத்தடுத்த கல்யாணங்களுக்கு செலவு செய்ய கையில் மிஞ்சுவது என்ன என்று தெரியும்.இருபது களஞ்சி நகை. பண்ட பாத்திரம், மாப்பிள்ளைக்கு சங்கிலி என்று உற்சாகமாகக் கல்யாணம் பேசி முடித்தார். விற்று விடலாம் என்று அவர் நினைத்திருந்த புஞ்சைக் காட்டின் ஒரு பகுதி விற்காமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தது.காற்றாலைக்கு யாரோ வெளியூர்க்காரன் வாங்கத் தயாராக இருப்பதாக சொல்லப்பட்டதை நம்பித்தான் அவர் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு வாக்கு கொடுத்தார். நிலத்தை வாங்க சொன்னபடி சொன்னவன வரவில்லை. இன்னும் கொஞ்ச காலம் ஆகும் என்று தகவல் மட்டும் வந்தது. உள்ளூர்க்காரர்கள் அடிமாட்டு விலைக்குக் கேட்டார்கள். முதல் பெண் கல்யாணத்தையே சிறப்பாக நடத்திவிட முடியுமா என்று அவருக்கு உதறலாக இருந்தது. பெண் வீட்டிலும் பேசிப் பார்த்தார். ஆறு களஞ்சி தங்கத்துக்கு பதிலாக அந்தக் காட்டை எழுதிக் கொடுத்து விடலாம் என்று நினைத்தார். மறுத்து விட்டார்கள். டெல்லியில் வீடு வாங்க, கார் வாங்க, ஆத்திர அவசரத்துக்கு அது பயன்படாது என்றார்கள். அது தவிர மாப்பிள்ளை வீட்டால் பெரிய சிக்கல்கள் எதும் இல்லை. டெல்லிக்கு வந்து தேவைப்படும் முக்கிய பண்ட பாத்திரங்களை மட்டும் வாங்கிக் கொடுத்தால் போதும் என்று மாப்பிள்ளை சொல்லி விட்டார்.அதிகமாக வாங்கிக் கொடுத்தாலும் வைக்க வீட்டில் இடம் இல்லை என்றும் சொல்லி விட்டார். படித்த பையன். சொல்வதை மிகச் சிக்கனமாகவும், உறுதியாகச் சொல்லும் பையனை எதிர்த்துப் பேச மாப்பிள்ளையின் அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ தைரியமில்லை. மாப்பிள்ளைக்கு இரு சகோதரிகள் உண்டு அவர்கள் அவர் மகள்களோடு படிப்பவர்கள். ஸ்நேகிதிகள். அதனால் அவர்களாலும் பிரச்சினை இல்லை. இப்படி ஒரு மாப்பிள்ளை வாய்த்தது தனக்கும் அதிர்ஷ்டம் என்று அவர் நினைத்தார். கோமதியின் போட்டோவைப் பார்த்து சம்மதம் என்று சொன்னவன், பெண் பார்க்க வந்தபின் நிச்சயதார்த்தம் எப்போது, கல்யாணம் எப்போது என்று கேட்கத் துவங்கி விட்டதாக அவன் தங்கைகள் வந்து சொன்னார்கள். .அதுதான் அவருக்கு பெரிய சிக்கலைக் கொண்டு வந்தது. மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்து விட்டது அதனால் நான் கொடுப்பதை வாங்கிக் கொள்ளூங்கள் என்று சொல்லிவிட முடியாமல், பொன் வைக்கிற இடத்தில் பூவையும் வைக்காமல், பூவைத்து பொன்னாகவும் சமாளிக்காமல் தன்னால் முடிந்ததைச் சொன்னார். மாப்பிள்ளை வீட்டிலும் சரி என்று சொல்லி விட்டார்கள். கொஞ்சம் குறைத்துச் சொல்லியிருக்கலாமோ என்று மனசு அதன்பின் அடித்துக் கொண்டது. முதல் திருமணத்தைக் குறையில்லாமல் நடத்தி விட்டால், நடக்கவிருக்கும் இன்னும் இரு திருமணங்களும் எந்தச் சிக்கலுமில்லாமல் நடந்து விடும் என்று அவரை அவர் மனமே சமாதானப் படுத்திக் கொண்டது.
நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. ஊர் வழக்கப்படி நாலு ஜோடிக் கம்மல்கள், கல் கம்மல், தேன் கூட்டுக் கம்மல், மஹாலட்சுமி கம்மல், ஜிமிக்கி வைத்த கம்மல் வாங்கியாகிவிட்டது. இருந்த பழசை உருக்கி, புதிதாகச் செய்து ஊர் பார்வைக்குக் காட்டியபோது அவருக்கே மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. கடைக்குட்டி மகள் தனக்கும் சமீபத்தில் வந்த படமொன்றின் கதாநாயகி போட்டிருப்பது போன்ற ஜிமிக்கி வேண்டும் என்று அடம் பிடித்தாள்.. முதலில் கல்யாணம் முடியட்டும் என்று பெரும் சத்தம் போட்டு அவளைச் சமாதானப்படுத்தினார். ஆறு சாதா வளையல்கள். இரண்டு கல்வளையல், நெளி, மோதிரம், நெக்லஸ், டாலர் செயின் எல்லாம் செய்தாகி விட்டது. கடைசியாக கொத்து சங்கிலி பாக்கி இருந்தது. சொல்லி வைத்ததுபோல பலரும் அதைத்தான் கேட்டார்கள். செய்யக் கொடுத்திருப்பதாக அவர் சொல்லி வைத்தார். நாள் நெருங்கி அவரை வதைக்கத் துவங்கியது.
மகள்கள் சாப்பாட்டை வைத்து விடுவார்கள். சாப்பிட்டு தனியே வந்து நாற்காலியில் அம்ர்ந்துகொள்ளும் போது, காப்பி கொடுக்கிற சாக்கில் அதை ஆற்றிக் கொண்டே அருகில் வந்து நின்று, அவர் மனைவி பார்ப்பாள்.’’ செய்யலாம் செய்யலாம் யோசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.’’ என்பார் அவள் பார்வையைப் புரிந்து கொண்டவராக. ’’காலாகாலத்ல செய்யணுமில்ல’’ என்று அவள் போய் விடுவாள். அவள் வார்த்தைகள் அவரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும். யோசித்து யோசித்து சோர்ந்து போவார். பின்னால் செய்து போடுகிறோம் என்று பேசுங்கள் என்று யாரோ சொன்ன யோசனையை தூக்கிக் கொண்டு மனைவி வந்தாள். தப்பா போயிடும் என்று சொல்லி அவள் வாயை அடைத்து விட்டார். அதன் பின் அவள் காப்பி கொடுக்கக் கூட வருவதில்லை.கடைக்குட்டிதான் வந்தாள். முகத்தையே ஏறிட்டுப் பார்த்தாள். அவள் கேட்ட ஜிமிக்கிக்கு அவர் சம்மதம் சொல்வார் என்று எதிர்பார்த்திருப்பாள். அவருக்குள் வேறு விஷயம் புகைந்து கொண்டிருந்ததை அவள் அறிந்திருக்க மாட்டாள். ஏமாற்றமாகப் போனவளிடம் எல்லாம் முடியட்டும் லோலாக்கு வாங்க முடியுமான்னு பாப்போம் என்றார். அவள் திரும்பி அவரைப் பார்த்தபோது கண்ணோரம் நீர் கோர்த்திருந்தது.. அவருக்கும் ஒரு மாதிரியாகி விட்டது.பெத்த மகள் ஆசையாக ஒன்றைக் கேட்கும்போது வாங்கிக் கொடுக்க முடியாத அப்பனாக இருப்பது அவருக்கு வருத்தமாக இருந்தது. எப்படியும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். முதல் மகள் கல்யாணத்திற்கே இப்படி நிற்கிறோமே என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார். நடக்க வேண்டிய இன்னும் இரு கல்யாணங்களை நினைக்கவே மலைப்பாக இருந்தது.
அங்கையற்கண்ணி பக்கத்து ஊரில் இருந்தாள். அவள் ஊருக்கு இரண்டு வழிகள் இருந்தன. பஸ்ஸில் போகும் வழி ஒன்று. நடந்து போகும் குறுக்கு வழி ஒன்று. அவர் யாருக்கும் தெரியாமல் அங்கையை சந்திக்க விரும்பினார். நடந்தே போய் விடலாம் என்று முடிவெடுத்தார். அவள் ஊருக்குப் போக, நடுவில் குளத்தைக் கடக்க வேண்டும் தண்ணீர் அவ்வளவாக இல்லை என்பதையும், ஆட்கள் குளத்தைக் கடந்து அந்த ஊருக்குப் போகிறார்கள் என்பதையும் முதல் நாளே உறுதிப் படுத்திக் கொண்டார். எப்போது போவது என்று யோசித்து, நல்ல நேரம் பார்த்து பகல் பத்து மணிக்குப் போவது என்று முடிவெடுத்தார். ஒரு மணி நேரத்தில் அங்கு போய் விடலாம். அங்கையற்கண்ணி வேலைகளை முடித்து ஓய்வாக இருக்கக் கூடும். ஐந்து பத்து நிமிடத்தில் பேச்சை முடித்து விடலாம். அவள் மறுப்பு சொல்ல மாட்டாள் என்று நம்பினார். கிளம்பும்போது, வீட்டில் கூட எங்கு போகிறோம் என்று சொல்லவில்லை.
மருத மரங்கள் வரிசையாக நின்ற குளக்கரையில் அவர் நடந்து கொண்டிருந்தார். ஒரே கிளிச்சத்தம். சின்ன வயதில் அங்கையற்கண்ணிக்கு அவர் கிளியெல்லாம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்.. வளர்ந்த கிளியைப் பிடித்து அதன் சிறகை வெட்டி, வீட்டில் பழக்குவதை விட குஞ்சுக்கிளியப் பிடித்து வளர்த்தால் அது பேசும் என்று அவர் சொன்ன போது அவள் நம்பவில்லை. தொட்டதும் கொத்தி ரத்தம் வர வைக்காத. நகங்களால் பிராண்டாத பச்சைக்கிளிக் குஞ்சைப் பிடித்து தருவதாக அவளுக்குள் ஆசைகளை அலையடிக்க வைத்தார். பள்ளிக்குடம் போகும் போதெல்லாம் என்னாச்சு என்று சைகையில் கேட்பாள். அவரும் பொறு என்று சைகை செய்வார். ஒரு வார விடுமுறை நாளில் கிளிக் குஞ்சு தேடி ஆறு மருத மரங்களில் அவர் ஏறியிருந்தார். ஒரு மரப் பொந்தில் கிளிக்குஞ்சு இருந்தது. மெல்லிய சத்தம் வந்தது. ஆள் நடமாட்டம் பார்த்ததும் சத்தம் அதிகமாயிற்று. மருத மரத்தின் மேல் பல பெருங்கிளிகளின் சத்தம் கேட்டது. அவர் கையோடு கொண்டு போயிருந்த தகரத் துண்டால் பொந்தின் பாதியை அடைத்தார். குஞ்சு பெரிதாகி இறகுகள் முளைக்கும் வரைக்கும் தினம் தினம் போய்ப் பார்த்தார். சிறகு முளைத்த கிளி பொந்தை விட்டுப் பறக்க வழியில்லாமல் கீச்சிடத் துவங்கிய நாளில் அதைப் பிடித்து வந்தார். அங்கையற்கண்ணி ஆச்சர்யத்தில் கண்களை விரித்தாள். கூண்டு வாங்கி வளர்த்தாள்.அந்தக் கிளி அவள் பெயரை அங்க… அங்க என்று அழைப்பதாகச் சொன்னார்கள். சில நாளில் கிளியைக் காணவில்லை. ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். அங்கை அழுத வண்ணமே இருந்தாள். உடல் நலமில்லாமல் போயிற்று. வெளியூர் டாக்டர் வந்து பார்த்தார். மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப் பட்டாள்.. பால்வண்ணம் அவளுக்காக இன்னொரு கிளியத்தேடி மரம் மரமாய் ஏறினார். வழுக்கி விழுந்ததில் கை உடைந்து கிடந்தார். வீட்டில் எல்லோரும் திட்டித்தீர்த்தார்கள். அப்படி இப்படி அங்கயற்கண்ணீயின் பெயர் அடிபட்டது. என் மகள் கிளியெல்லாம் கேட்கவில்லை என்று அவள் அம்மா வந்து சத்தமிட்டுவிட்டுப் போனாள். அப்பா அங்கையற்கண்ணி பற்றிய பேச்சு வந்தா காலை ஒடித்து வீட்டில் போட்டு விடுவேன் என்றார். அந்த வருடம் பரிட்சை எழுதவில்லை. பெயிலாகி அடுத்த வருடம் அங்கையற்கண்ணியும் அவளும் ஒரே வகுப்பில் படித்தார்கள். ஆனால் ஒரு பேச்சு இல்லை. பார்வை இல்லை. அவளையும் வீட்டில் எச்சரித்திருக்கலாம். படிப்பை தொடர முடியாமல் போய் விட்டது அவருக்கு. கொஞ்சம் நிலபுலன்களை வைத்து விட்டு அப்பா விடை பெற்றுப் போய் விட்டார். அவள் கல்லூரியில் படிக்கப் போனாள். அவர் கல்யாணம்தான் முதலில் நடந்தது.வயசுப் பெண்கள் பொதுவாக கல்யாணத்துக்கு வருவதில்லை. கல்யாணம் முடிந்து மனைவியோடு கோவிலுக்குப் போனபோது தன் வீட்டு ஜன்னலை நிறைத்து நின்று கொண்டு அவரைப் பார்த்து சிரித்தாள். பெண் அழகாக இருக்கிறதென்று சின் முத்திரை காட்டினாள்.
மறு வீடு முடிந்து நிரந்தரமாக ஊரை விட்டு அவள் கணவன் வீட்டுக்குப் போகும் போது அவள் அழுததது அனைவருக்குமே அந்த ஊரில் ஞாபகம் இருந்தது. அவளையும் மாப்பிள்ளையையும் அழைத்துப் போக வில் வண்டியைப் பூட்டுவார்கள். உறவினர்கள் அவளை வழியனுப்பி வைக்கக் கூடுவார்கள். மாப்பிள்ளை முதலில் ஏறிக் கொள்வார். தான் வண்டி ஏறும் முன் அங்கை எல்லோரையும் ஒரு முறை பார்ப்பாள். பின் கேவிக் கேவி அழுவாள். கண்ணீர் முகம் நனைத்து புடவையில் வழியும். “குத்தால அருவி மாதிரியில்லா கொட்டுதா.’’ என்று குரல் வரும். “அழுகுத புள்ளய ஏன் அனுப்பனும்’’ என்று ஒரு ஆதரவுக் குரல் வரும்.’’ இன்னொரு நல்ல நாள்ல போகலாம்’’ என்பார்கள். உடனே நல்ல நாள் வராது இப்படி ஒன்றரை மாதம் ஊரிலேயே இருந்து புகுந்த வீட்டில் வலது காலை எடுத்து வைத்த கொஞ்ச நேரத்தில் அவள் வாந்தி எடுத்து விட்டதாகச் சொல்லிச் சிரிப்பார்கள்.
அங்கையை நினைத்தபடியே அவர் குளக்கரை தாண்டி விட்டார். பறவைகள் கூட்டமாய் தெற்கு நோக்கி அவசரமாகப் பறப்பதைப் பார்த்தார். அப்படிப் பறந்தால் மழைவருமே என்று நினைத்துக் கொண்டார். குளம் முடிகிற இடத்துக்கு சற்று முன்னால் ஒத்தையடிப்பாதை. அது விரிந்து கிடந்த தண்ணீரை நோக்கிப் போயிற்று.குளத்தைக் கடந்து போக வேண்டும்.நடுவில் பள்ளமில்லாமலிருந்தால் வேட்டி நனையாமல் போய் விடலாம். வேட்டியை தூக்கிக் கட்டிக் கொண்டார். எப்போதாவது கட்டும் வேட்டி. குடையைக் கக்கத்தில் வைத்துக் கொண்டார்.ஒரு கையில் செருப்பைத் தூக்கிக் கொண்டு சின்ன சின்ன எட்டுவைத்து நடந்தார். ஒரு இடத்தில் கால் வழுக்கிக் கொண்டு போயிற்று பகீரென்றது. அவர் உயரத்திற்கு அது பெரிய ஆழமில்லை. ஒரு வழியாக நீரைக் கடந்தார். வேட்டியை சரி செய்து கொண்டார். செருப்பைப் போட்டுக் கொண்டு கம்பீரமாக நடந்து அங்கை வீட்டை விசாரித்தார்.
பெரிய காரை வீடு. நடைவாசல் கதவு சாத்தியிருந்தது. அழைப்பு மணி இருக்கும் என்று சொல்லியிருந்தார்கள்.அழுத்தினார். வெகுநேரமாயிற்று. காத்திருந்தார். யாரும் வரவில்லை. பதட்டம் அதிகரிக்கத் துவங்கியது. அதுவரையில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்த வெயில் சற்று தணிந்து குளிர் காற்று வீசத் துவங்கியது.யாரும் வருவதாகத் தெரியவில்லை. நிற்பதா போவதா என்று குழம்பினார். .நேரம் கழிய வீட்டில் யாரும் இல்லையோ என்று யோசித்தார். இன்னும் கொஞ்ச நேரம் கழிந்தது. இன்னொரு முறை மணியடிக்கலாம், அப்படியும் திறக்காவிட்டால் போய் விடலாம் என்று தீர்மானித்து நேரம் கழிந்தபின்,அழைப்பு மணியை நோக்கி கையைக் கொண்டு போனபோது கதவு திறக்கப்பட அங்கை நின்றிருந்தாள்.
பார்த்த மாத்திரத்திலேயே புன்னகைத்து, “வாங்க வாங்க.’’ என்றாள். கதவு ’’சும்மாதான சாத்தி இருந்துச்சு. நா, குளிச்சுக்கிட்டிருந்தேன்.’’ என்றாள். உள்ளே அழைத்துப் போனாள். வாசலிலிருந்து வீட்டுக்கு நடந்தார்கள்.பெரிய வாசல். சின்னதாய் அழகான கோலம்.படிடேறி உள்ளே போனார்கள் பணம் கொட்டிக் கிடக்கும் விஸ்தாரமான வீடு. உட்காரச் சொன்னாள். வீட்டில் யாருமில்லை. கணவர் தேங்காய் வெட்டுக்காகப் போயிருந்தார்.வரமாலை ஆகும் என்றாள். நல்லது என்று நினைத்துக் கொண்டார். உயரமான டம்ளரில்.சர்பத் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். ’’பொண்ணுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன். வருவீங்கன்னு நினைச்சேன்’’ என்றாள். மாப்பிள்ளை பற்றி விசாரித்தாள். ’’பையன் நல்ல பையன்னு கேள்விப் பட்டிருக்கேன்’’ என்றாள். அவர் சொல்ல ஒன்றுமில்லை. எல்லாமே அவளுக்குத் தெரிந்திருந்தது. பேச்சோடு பேச்சாக தன் கஷ்டத்தையும் கேள்விப்பட்டதாக அவள் சொல்லி விட்டால் நல்லது என்று நினைத்தார். வெளியே இருள் இன்னும் அதிகமாகத் துவங்கியது. ’’மழை வருதே,’’ என்றாள்.அவர் தலையசைத்தார். ’’கல்யாணத்துக்கு சொல்ல வந்தீங்களா, தனிய வந்திருக்கீங்க’’ என்றாள். அவர் பதில் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்தார். உள்ளுக்குள் விம்மினார். அழுகை வந்துவிடும்போல இருந்தது. அவள் முகத்தையே அமைதியாகப் பார்த்தார். ’’என்னாச்சு’’ என்று அவளே கேட்டாள். இனியும் தாமதிக்க வேண்டாம் என்று அவர் தன் சூழலைச் சொன்னார். பணம் வேண்டும். நிலம் விற்றதும் கொடுத்து விடுகிறேன். இல்லை நிலப் பத்திரத்தை தருகிறேன். பணம் திருப்பிக் கொடுக்கும் வரைக்கும் இருக்கட்டும் என்றார்,
அவள் திடுக்கிட்டாள்.
’’திடீர்ன்னு வந்து கேட்டா என்ன செய்யறது. நிறைய பேரு இப்படி அவுஹ கிட்ட பணம் வாங்கிட்டு போயிருக்காங்க. நில பத்திரம் மட்டும்தான் இருக்கு. யாரும் பணத்த திருப்பிக் கொடுக்கவே இல்ல.கேட்டா எல்லாருக்கும் கோவம் வருது. இனிமே பணம் கொடுக்கறதில்லன்னு முடிவு பண்ணிட்டாக. அவஹ. உங்களுக்கு பணம் குடுங்கன்னு சொல்ல முடியாதே.’’
அவர் முகத்தை நேரடியாகப் பார்த்துச் சொன்னாள்.
“யாராவது வட்டிக்கு குடுக்கறவங்க கிட்ட வாங்கிக் கொடுத்தாக்கூட கல்யாணம் முடிஞ்சதும் எப்படியாவது புரட்டிக் கொடுத்துடலாம்.’’
அவர் அவளை நேரடியாகப் பார்க்கவில்லை
“வட்டிக்காரன் யார எனக்குத் தெரியும். எப்படி எங்கிட்ட வந்து சொல்றீங்க. நா, வட்டிக்கு விடுறன்னு எவனாவது எதாவது சொன்னானா?’’
அவள் குரலில் கொஞ்சம் கடுமை. அவர் அமைதியாக இருந்தார். அவளும்.நேரம் கொடுமையாக நகர, ‘’ சரி. முடியாத சூழ்நிலைல தெரிஞ்சவங்க கிட்டதான கேட்டுப் பாக்க முடியும். அதான் வந்தேன். எது நடக்குமோ அது நடக்கும். நம்மால எத தடுத்து நிறுத்த முடியும்.கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் சரியா. வரட்டுமா?’’
எழுந்து கொண்டார். திரும்பிப் பார்க்காமல் நடந்து வாசலைக் கடந்து தெருவுக்குப் படியிறங்கினார். சில அடிகள் நடந்ததும் போது நல்ல காற்று.. குடையை விரித்தார். அடித்த காற்றில் குடை எதிர் பக்கமாக திரும்பியது. மழை வலுத்துப் பெய்ய ஆரம்பித்து விட்டது. நிமிடத்தில் நன்றாக நனைந்து விட்டார்.. மழையைத் தவிர்க்க விரும்பி வேகமாக அங்கை வீட்டு நடைவாசலுக்கே வந்தார். நின்றார். நனைந்திருந்த சட்டையைக் கழற்றிப் பிழிந்து உதறினார். எங்கும் கரிய இருள் சத்தமாக மழை… வீட்டில் எங்கெல்லாமோ இருந்து நீர் வழியும் சத்தம். அவருக்குக் கொஞ்சம் முன்னால் நீர்ப்போக்கி வழியே அருவிபோல கொட்டத் துவங்கியது.அமைதியாக நின்றார். மழையின் கடவுளின் வாசனை. நடுநடுவே சிறு மின்னல். தூரமாய் விழுந்து அடங்கும் இடிமுழக்கம்.. மழை நின்றால் போதும் என்பது தவிர, அவருக்கு வேறு யோசனைகள் எதுவும் எழவில்லை.
சற்று நேரத்தில் மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. வெளிச்சம் வந்தது. சிமெண்ட் தளம் போட்ட வாசலில் தண்ணீர் தேங்கியிருக்க காலால் அழைந்தபடி அங்கையற்கண்ணி வந்தாள். அடைத்துக் கொண்டிருந்த நீர்வழிப் பாதையின் தூசு துரும்பை கையால் அள்ளியவள் அவரைப் பார்த்தாள். சட்டென்று அதிர்ந்து “இன்னும் இங்கனதான் நிக்கியளா. போயிருப்பியன்னுல்லா நினைச்சேன். உள்ள வந்திருக்கலாமில்ல.’’ என்றாள். அவர் ஒன்றும் சொல்ல வில்லை. அவசரமாக சட்டையைப் போட்டுக் கொண்டார்..’’ நனைஞ்சுட்டீங்க போலருக்கே. நேரம் ஆகுதில்ல சாப்பிடுதியளா?’’ என்றதற்கும் அவர் வேண்டாம் என்று தலையசைத்தார். அவளைத் தவிர்த்து, தூறலையே பார்த்தார். வளைந்த குடையை சரி செய்து கொண்டார். அவள் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவருக்குப் புரிந்தது. அவளின் அருகாமை அவரை உறுத்தத் துவங்கியது. அவர் குடையை விரித்து கிளம்பத் தயாரானார். “வரேன்,’’ என்று தெருவை நோக்கி திரும்பித் துவங்கியபோது, “வேணும்ன்னா ஒண்ணு செய்யுங்க. இத பேங்க்ல எங்கயாவது வச்சு பணம் வாங்கிக்கோங்க. முடியும்போது திருப்பிக் கொடுங்க.’’ சொல்லிக் கொண்டே சட்டென்று தன் கனத்த வளையல்களைக் கழட்டினாள்.
அவர் திகைப்புடன் பார்த்தார்.
’’ எங்க வீட்ல எனக்குப் போட்டதுதான். இது மாதிரி இன்னும் ரெண்டு மூணு ஜோடி எனக்கு இருக்கு. இத எங்கன்னு என்ன யாரும் கேக்க மாட்டாங்க. நீங்க யோசிக்க வேண்டாம்.நா யார்கிட்டயும் சொல்லவும் மாட்டேன்.’’
நீட்டினாள். மறுக்காமல் வாங்கிக் கொண்டார். வேகமாய் இறங்கினார். “மெல்ல பத்திரமா பாத்துப் போங்க.’’ என்றாள். அவர் வளையல்களை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டார்.
– ஜெகநாத் நடராஜன்
Thanks : kalakam