அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு மாவட்டம், வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள காரமுனை பகுதியில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில், வெளிமாவட்ட சிங்கள மக்களைத் திட்டமிட்டு மிகவும் இரகசியமான முறையில் குடியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது .
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள குடுப்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேருக்குக் காணி வழங்குவதற்காக இன்று காலை புனானை வனவிலங்கு திணைக்களக் கட்டடத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சி.யோகேஸ்வரன், ஞா.ஶ்ரீநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, இ.பிரசன்னா, மட்டடக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவான், மட்டடக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் அணி, மகளிர் அணி உறுப்பினர்கள் உட்படப் பலரும் இணைந்து குறித்த காணி வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
புனானையில் காணி தொடர்பாக தகவல் பதிவுசெய்யப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு காரமுனைக்கு தங்களது இடங்களைக் காண்பிக்கச் சென்றபோது ஆணையாளருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற கருத்து முரண்பாடு ஆர்ப்பாட்டமாக மாறியது.
இதன்போது அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை உடன் நிறுத்தக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது ஆணையாளர் குறித்த இடத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் தப்பிச் சென்றார்.