கொலை, போக்சோ வழக்குகள், கந்து வட்டி வழக்குகளில் சிக்கிய ஆறு வழக்கறிஞர்களுக்குத் தடை- தமிழ்நாடு பார் கவுன்சில் அதிரடி
கொலை, போக்சோ வழக்குகள், அதிக வட்டி வசூலித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆறு வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், செம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ்வர்ராஜ், சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஆகியோர் எந்த நீதிமன்றங்களிலும் ஆஜராக கூடாது என தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றிய சீதாராமன், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும், அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும் உள்துறை கூடுதல் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
போலி முத்திரை தாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருப்பூர் வழக்கறிஞர் ராஜேந்திரன், போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவை வழக்கறிஞர் அசோக் மற்றும் கண்டக்டராக பணியாற்றியதை மறைத்து சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்த சென்னை மயிலாப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் ஆகியோருக்கும் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.