அரசுக்கு எதிராக அநுராதபுரம் – குருநாகல் வீதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
விவசாயச் செய்கைக்குத் தேவையான உரத்தை பெற்றுத்தருமாறு கோரி, ஐக்கிய விவசாயிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் விவசாயிகள், இன்று பகல், அநுராதபுரம் – குருநாகல் பிரதான வீதி, ஸ்ரவஸ்திபுர சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, அநுராதபுரம் – குருநாகல் வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்துரைத்த பராக்கிரம விவசாயிகள் அமைப்பின் தலைவர் லலித் சிறிசேன,
“விவசாயச் செய்கைக்குத் தேவையான உரம் கிடைக்கும் வரை நாம் வயல்களில் இறங்கி விவசாயம் செய்வதற்கு எம்மால் முடியாது. நாளை உரம் வழங்கப்படும் என்றால் வயல்களுக்குள் இறங்குகின்றோம். போதியளவு மழை பெய்கின்றது. அதேபோன்று நாச்சாதுவ வாவியில் போதியளவு நீர் உள்ளது.
விவசாயத்துக்குத் தேவையான நீர் காணப்பட்டாலும் விவசாயத்தை மேற்கொள்ள முடியாது. ஏனெனில், உரம் இல்லை. இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் விருப்பத்துடன் உள்ளோம். அதனை உடனடியாகச் செய்ய முடியாது” – என்றார்.