சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்!
ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் – பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி மஹ்முதுல்லா, ஷாகிப் அல் ஹசன் ஆகியோரது அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 50 ரன்களையும், ஷாகிப் அல் ஹசன் 46 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி ஆரம்பம் முதலே எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதிலும் அந்த அணியில் இருவரை தவிர மற்ற யாரும் இரட்டை இலக்க ரன்களைக்கூட தொட வில்லை. இதனால் 19.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களை மட்டுமே எடுத்தது.
வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் வங்கதேச அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி, சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது.