என் உரையாடல்களை ஒட்டுக்கேட்ட சி.ஐ.டியினரை விசாரிக்க வேண்டும்!
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் போன்ற தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் உபகரணங்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வைத்திருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்னையை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த சம்பிக்க ரணவக்க, மேலும் கூறுகையில்,
“செப்டெம்பர் 21 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் என்னை விசாரணையொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நான் அங்கு சென்றேன். என்னிடம் விசாரணையின் போது, அதிகாரியொருவர் எனது தொலைபேசி உரையாடல் குறித்தும் கூறினார். அதாவது 2018, 2019 இல் எனது தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டுள்ளதாக எனக்குத் தெரியவந்தது. அவ்வாறு தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்பதற்கு நீதவானின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதா? எனக் கேட்டேன். ஆனால், அவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை.
இதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் எனது தனிமைப்பட்ட உரிமை மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியுள்ளனர். இதில் கருத்துச் சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. இதனால் அந்த அதிகாரிகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்கின்றோம்.
இதேவேளை, வட்ஸ்அப் மூலமான உரையாடல்களே இவ்வாறு ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. ஆனால், வட்ஸ்அப் செயலியில் அவ்வாறு ஒட்டுக் கேட்பதற்கான அம்சங்கள் கிடையாது. அப்படியென்றால் ஏதேனும் விசேட தொழில்நுட்பம் ஊடாக மட்டுமே அதனைச் செய்ய முடியும்.
கடந்த காலங்களில் உலகில் பிரான்ஸ் ஜனாதிபதி, இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பிரபலங்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. பெகாசஸ் என்ற பெயரில் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட அந்தத் தொழில்நுட்ப உபகரணம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இருக்கின்றதா? அவ்வாறு இல்லாவிட்டால் சாதாரண வட்ஸ்அப் தொடர்பாடல்கள் தொடர்பான தகவல்களை எப்படி பெற்றார்கள் என்று விசாரணை நடத்த வேண்டும்” – என்றார்.