குற்றவாளிகள் விடுதலை! அப்பாவிகள் சிறைகளில்! சபையில் கிரியெல்ல சீற்றம்
“நாட்டில் அப்பாவிகள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளை, குற்றவாளிகள் சகலரும் தற்போது விடுதலையாகிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆபத்தான நிலையைத் தடுக்க வேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தினார் எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல.
பாராளுமன்றத்தில் நேற்று இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி., மேலும் கூறுகையில்,
“நாட்டின் சட்டம் – ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைகின்றது என்ற கருத்து உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் எம்மைச் சந்தித்த வேளையில் நாம் கூற முன்னர் அவர்களே இந்த நிலைமைகளை எமக்குக் கூறிவிட்டனர். குறிப்பாக அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை புதிய அரசு நாசமாக்கி வருகின்றது.
சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. சந்திரிகா காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து சுயாதீன ஆணைக்குழுக்களை அவர் உருவாக்கினர். ஆனால், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இந்தச் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் அவர் கொண்டுவந்தார். நாம் ஆட்சிக்கு வந்து மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கினோம். ஆனால், புதிய அரசு மீண்டும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து சகல சுயாதீன ஆணைக்குழுக்களையும் நாசமாக்கி நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இன்று நாட்டில் அப்பாவிகள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளை, குற்றவாளிகள் சகலரும் விடுதலையாகிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆபத்தான நிலையைத் தடுக்க வேண்டும்.
நாட்டில் நீதிப்பொறிமுறை, நியாயப்பாடுகள் நாளுக்கு நாள் அழிக்கப்படுகின்றன என்ற கருத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் உருவாகியுள்ளது.
நாட்டில் அவசர அவசரமாக சட்டம் இயற்றப்படுகின்றது. புதிய அரசமைப்பு உருவாக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் தனிப்பட்ட சட்டத்தரணிகளைக் கொண்டு இந்த அரசமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாகவே அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். தனியார் சட்டத்தரணிகளைக் கொண்டு புதிய அரசமைப்பை வரைந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள அரசு முயற்சிக்கின்றது. ஆனால், அவ்வாறு இடம்பெறக்கூடாது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இதனைக் கொண்டுவந்து எம்மிடம் ஆலோசனைகளைக் கேட்டே உருவாக்கப்பட வேண்டும்.
புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் வேளையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களின் உரிமைகளைப் பலப்படுத்தாது போனால் அரசு சர்வதேசத்திடம் செல்ல முடியாது. ஆகவே, இதனைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
இப்போது இவர்கள் புதிய அரசமைப்பைக் கொண்டு வருகின்றனர். ஆனால், அதனை நாம் பார்க்கவே இல்லை. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு இதனைக் கொண்டுவந்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை – கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு சர்வதேசம் இலங்கையை அங்கீகரிக்கும் விதமாக சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுப்பது அவசியம்” – என்றார்.