இனங்களுக்கிடையிலான சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்!
கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற இனங்களுக்கிடையிலான சமூக பிரச்சனைகள் காணிப் பிரச்சினைகள் மற்றும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மூன்று சமூகங்களுக்கு இடையிலும் அந்யோன்யமான சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் அவர்களினால் ஒரு குழு நியமிக்கப்பட்டு அக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் இதன்போது அறிவூட்டப்பட்டதுடன், இவ்விடயங்கள் தொடர்பாக எதிர்கொண்ட சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் அவர்களது தலைமையில் இடம் பெற்றிருந்தது குறித்த கலந்துரையாடலினை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் ஏற்பாடு செய்திருந்தார்.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட குறித்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்களும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலின் போது பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று சிபாரிசுகளை முன்வைத்திருக்கும் குழுவினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பிரச்சனைகளுக்கான சிபாரிசுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்களுக்கு இதன்போது முன்வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக இனங்காணப்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் நாட்களில் முறைப்பாட்டாளர்களையும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரி களையும் பிரதேச செயலக ரீதியாக ஒரே இடத்திற்கு அழைத்து பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதாக இதன்போது ஆளுநரினால் அறிவுறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.