டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்று அபாய எச்சரிக்கை.
பல நாடுகளில் பரவி வரும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்று இலங்கைக்குள் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படு மாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த வார இறுதியில் இடம்பெற்ற சட்டவிரோத ஒன்று கூடல்களின் விளைவுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தெரியும் என அச்சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
உலகில் கொரோனா தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்டா பிளஸ் பிறழ்வானது விமான நிலையம் அல்லது கடல் பயணிகளின் மூலம் நாட்டிற்குள் நுழைய முடியும்.
சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் முற்றாகப் புறக்கணித்துள்ளதாகவும், செல்வாக்குள்ள நபர்கள் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்டா பிளஸ் பிறழ்வு நாட்டிற்குள் நுழைந்து சமூகத்தினுள் பரவுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவர் பொதுமக்களை எச்சரித்தார்.
நாட்டின் தடுப்பூசி இயக்கம் உயர் மட்டத்தில் இருந்தாலும், வைரஸ் பரவுவதற்கான பின்னணி ஏற்கனவே உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.