இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு ஒரே நாளில் அதிரடியாக 666 ஆக உயர்வு: காரணம் என்ன?
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கடந்த சில நாட்களாக குறைவாக பதிவான நிலையில், இன்று அதிரடியாக 666 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் கேரளா செய்த திருத்தமே இந்த எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது குறைந்து காணப்படுகிறது. தினசரி உயிரிழப்பும் 500க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. கடந்த 21ம் தேதி இந்தியாவில் கொரோனா காரணமாக 231 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,73,728 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை யில் கேரள அரசு செய்த திருத்தமே இந்த எண்ணிக்கை உயர்வுக்கு காரணம்.
கேரளாவில் நேற்று புதிதாக 9,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 99 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனுடன் கூடுதலாக 464 இறப்புகளை கேரளா சேர்த்துள்ளது. இதில், 292 இறப்புகள் ஜூன் 14ம் தேதிவரை பதிவானவை ஆகும். போதிய ஆவணங்கள் இல்லாததால் இவை பதிவு செய்யப்படாமல் இருந்தன. இதேபோல், மத்திய அரசின் புதிய வழிக்காட்டு நெறிமுறைகள்படி 172 இறப்புகளும் சேர்க்கப்பட்டன.
“உயிரிழப்பு எண்ணிக்கையில் இருந்து பலரின் இறப்புகளை விலக்க வேண்டுமென்றே எந்த முயற்சியும் இல்லை. கோவிட்-19 இறப்புகள் தொடர்பான ICMR வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறோம், ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, சிலரின் இறப்புகள் விடுபட்டு போயின. நாங்கள் பட்டியலில் திருத்தம் செய்வோம்” என்று கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 9,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 1,000க்கு அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மிசோரமில் புதிதாக 745 பேருக்கு தொற்று பரவியுள்ளது.