நவம்பர் 2 இல் யாழில் கூடும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2021/10/Telo-Surenthiran-Gurusuwamy-1-e1626455087132.jpg)
தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளின் கலந்துரையாடலை எதிர்வரும் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு இன்றைய கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட இணையவழியான கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா மற்றும் பேராசிரியர் சிவநாதன் (சி.வி.விக்னேஸ்வரன் சார்பில்) ஆகியோர் கலந்துகொண்டனர்” – என்றார்.