டி20 உலகக்கோப்பை: மேற்கிந்திய தீவை வீழ்த்தி சாதித்தது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 55 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் 2.2 ஓவர்களை வீசிய ஆதில் ரஷித் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியும் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் ஜேசன் ராய் 11, பேர்ஸ்டோவ் 9, மொயின் அலி 3, லியாம் லிவிங்ஸ்டோன் 1 என அனைவரும் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இருப்பினும் மறுமுனையில் நின்று விளையாடிய ஜோஸ் பட்லர் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் 8.2 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.
மேலும் டி20 உலக கோப்பையில் இதுவரை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றிராத இங்கிலாந்து அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று அந்த மோசமான ரெக்கார்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.