வெலிக்கடை சிறையில் கலவரம் வெடிக்கக் காரணம் என்ன?
“வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகளை 150 இற்கும் அதிகமான சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து தாக்க முற்பட்டுள்ளனர். இதையடுத்தே அங்கு கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கலவரம் வெடித்துள்ளது. இதுதான் உண்மை. அங்கு கைதிகளுக்கிடையில் மோதல் இடம்பெறவில்லை.”
– இவ்வாறு சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் செயலாளர் சுதேஸ் நந்திமால் சில்வா தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளைப் பார்வையிட்டமையைத் தொடர்ந்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த ஒரு மாத காலமாக வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் தமது உரிமையை பெற்றுத்தருமாறு கோரி கூரைகளில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொலைக் குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்வதான கருத்தையே சிறைச்சாலைகள் ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கின்றனர் .
ஆனால், அது உண்மைக்குப் புறம்பான கருத்தாகும். ஏனெனில் அந்தக் கைதிகளின் கோரிக்கையாக அமைவது அவர்களுக்கு உரிய பொதுமன்னிப்பை வழங்குதலே ஆகும்.
துமிந்த சில்வாவை விடுதலை செய்ய முடியுமாயின் இவர்களையும் விடுதலை செய்ய முடியும்.
13 வருடங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற இந்தக் கைதிகளுக்கு அரசு தொடர்ச்சியாக பொய்யான வாக்குறுதிகளையே வழங்கியுள்ளது.
இந்நிலையில், கைதிகள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தருணத்தில் 150 அதிகாரிகள் அவர்களைத் தாக்க முற்பட்டுள்ளனர்.
அதேபோல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் கைதிகளுக்கு உணவு வழங்கிய கைதிகளை சிறை அதிகாரிகள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இது சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும். ஏனெனில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது” – என்றார்.