ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது (Video)
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.