உங்களால் தேசம் பெருமையடைகிறது; மிகப்பெரிய வெற்றி:
இந்திய அணிக்கு எதிராக உலகக் கோப்பைப் போட்டியில் இதுதான் முதல் வெற்றி, மிகப்பெரிய வெற்றி, இந்தப் பயணம் தொடரட்டும் என்று பாகிஸ்தான் அணிக்கு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா இருவரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த 1992ம் ஆண்டு சிட்னியில் விளையாடியதிலிருந்து 50 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்திருந்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை வென்று தனது தாகத்தை தீர்த்துக் கொண்டது.
இந்த வெற்றிக்கு பாகிஸ்தான் அணியை அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா இருவரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்வி்ட்டரில் பதிவிட்ட கருத்தில் “பாகிஸ்தான் அணிக்கு எனது வாழ்த்துகள். குறிப்பாக அணியை வழிநடத்திச் சென்ற பாபர் ஆஸமுக்கு வாழ்த்துகள். பாபர் ஆஸம், ரிஸ்வான், ஷாகின் அப்ரிடி மூவரும் சிறப்பாகச் செயல்பட்டனர். உங்களால் தேசம் பெருமை அடைகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “அல்ஹம்துலில்லாஹ்.. இதுதான் முதல் வெற்றி. மிகப்பெரிய வெற்றி. ஆனால், நாம் புறப்பட்ட இடத்தையும், இப்போது அடைந்த பயணத்தையும் நினைவில் வையுங்கள். அனைத்து பாகிஸ்தான் மக்களுக்கும் பெருமைக்குரிய தருணம். இந்த இனிய தருணத்தை அளித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.