மாணவர்கள் பழைய பஸ் பாஸை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் – போக்குவரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதையடுத்து நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய அடையாள அட்டையைக் காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
அதேபோல், பழைய பஸ் பாஸ் இல்லையென்றால், பள்ளிச்சீருடை, பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.