உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநருக்கு ரூ.3 கோடி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ள வருமான வரித்துறை!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.3 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ரிக்‌ஷா ஒட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், மதுரா மாவட்டத்தில் உள்ள பகல்பூர் பகுதியின் அமர் காலனியில் வசித்து வருபவர் பிரதாப் சிங், ரிக்‌ஷா ஓட்டுநரான இவருக்கு ரூ. 3 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹைவே காவல் நிலையத்தில் பிரதாப் சிங் புகார் அளித்துள்ளார். நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கி பிரதாப் சிங் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதில், வங்கியிலிருந்து பான் கார்டு கேட்டதால், கடந்த மார்ச் மாதம் பிரதாப் பகல்பூர் பகுதியில் இயங்கிவரும் ஜன் சுவிதா கேந்திராவில் பான் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். உண்மையான பான் கார்டுக்குபதிலாக நகல் பான்கார்டு கிடைத்துள்ளது. படிப்பறிவு இல்லாததால் உண்மையான பான் கார்டுக்கும் நகல் பான் கார்டுக்கு அவரால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், ரூ.3,47,54,896 வருமான வரி செலுத்துமாறு கூறப்பட்டிருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

யாரோ ஒரு நபர் தான் வியாபாரம் செய்வதற்காக பிரதாப் சிங் பெயரில் ஜி.எஸ்.டி எண்ணை பெற்றுள்ளதும், அதன் மூலம் அவர் 2018 – 19ல் ரூ.43,44,36,201 வர்த்தகம் செய்திருப்பதகாவும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை. எனினும், பிரதாப் சிங் கூறியிருக்கும் புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல்நிலைய தலைமை அதிகாரி அனுஜ் குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.