சூடானில் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்;
சூடானின் இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்த ஆட்சியை அதிரடியாகக் கவிழ்த்து முழுமையாக இராணுவம் இன்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோக், அவரது அமைச்சர்கள் சிலர் மற்றும் பல சிவில் சமூகத் தலைவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அங்கு இராணுவம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து தலைநகர் கார்ட்டூமில் வீதிகளில் இறங்கி இராணுவ ஆதரவுக் குழுக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சூடானில் 30 வருடங்களாக பிரதமராக இருந்த உமர் அல் பஷீர் பொதுமக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு பதவி விலகினார்.
இதனையடுத்து சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான படை (Forces of Freedom and Change – FFC) என்று அழைக்கப்படும் இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்த கூட்டமைப்பு இணைந்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசில் அப்துல்லா ஹம்டொக் பிரதமராக பதவியேற்றார்.
எனினும் இடைக்க அரசு அமைக்கப்பட்டதில் இருந்து அதில் அங்கம் வகித்த இராணுவம் – மற்றும் சிவில் அரசியல் தலைவகளுக்கு இடையில் முரண்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. நாட்டின் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான இராணுவத்தின் முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.
சூடானில் இராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமென வலியுறுத்தி இராணுவ ஆதரவுக் குழுக்களால் கடந்த வாரம் ஆா்ப்பாட்டப் பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே இன்று இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்த ஆட்சியை கவிழ்த்து இராணுவம் முழுமையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
சூடான் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும் சா்வதேச ஆதரவு இருந்ததால் நிலைமையை ஓரளவு சமாளித்து வந்தது. இந்நிலையில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால் அங்கு பெரும் நெருக்கடி ஏற்படும் எனக் கருதப்படுகிறது.