இந்தி மொழி சர்ச்சை: பழைய வீடியோ தற்போது வைரலானதா? கே.எஃப்சி விளக்கம்

கர்நாடகாவில் உள்ள கே.எஃப்.சி. விற்பனை மையம் ஒன்றில் இந்தி பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இந்தி பாடல் ஒலிபரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு கர்நாடகாவில் உள்ள உணவு மையம் என்பதால் கன்னட பாடலை ஒலிபரப்புமாறும் இல்லையென்றால், பாடலை நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.
இதனை ஏற்க மறுத்த கே.எஃப்.சி நிறுவன ஊழியர், இந்தியே இந்தியாவின் தேசிய மொழி என்று அந்த பெண்ணுக்கு பதில் தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து கே.எஃப்.சி. நிறுவன ஊழியரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதனை கண்டித்து #RejectKFC என்ற ஹேஷ்டேக்கை கன்னடர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கேஎஃப்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது பழைய காணொளி ஆகும். இது தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. கேஎஃப்சி இந்தியா அனைத்து சமூக கலாச்சார விழுமியங்கள் மீதும் உயர்ந்த மரியாதையைக் கொண்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் இருக்கும் ஒரு பிராண்ட் என்ற வகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான கே.எஃப்சி அனுபவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான எங்கள் முயற்சியாக வாடிக்கையாளர்கள் எந்தவொரு கேஎஃப்சி உணவகத்திற்கு சென்றாலும், தற்போது எங்களிடம் ஒரு பொதுவான பிளேலிஸ்ட் உள்ளது. அதுவே, நாடு முழுவதும் உள்ள எங்கள் உணவகங்களில் ஒலிபரப்பப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.