கறிக்கடையில் காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல்.. சிசிடிவியில் பதிவான காட்சிகள்
திருவள்ளூர் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் இறைச்சி கடை ஒன்றில் இரவோடு இரவாக இரண்டு ஆடுகள் இரண்டு முயல்கள் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் போலிவாக்கம் கிராமத்தில் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற அவர் காலை கடைக்கு வந்து பார்த்தபோது ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்து வைத்திருந்த இரண்டு ஆடுகள் முயல்கள் மற்றும் கடையில் வைத்திருந்த ரொக்க பணம் பத்தாயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மணவாள நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் இதனிடையே இறைச்சிக்கடை அமைந்த போலிவாக்கம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவில் காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் இறைச்சிக்கடையில் இரண்டு ஆடுகள் மற்றும் இரண்டு முயல்களைத் திருடி கொண்டு காரில் சென்றது தெரியவந்தது.
முன்னதாக கறிக்கடையில் திருட வந்த மர்ம நபர்களை பார்த்ததும் அங்கிருந்த வாயில்லா ஜீவனான தெருநாய்கள் குரைக்கத் தொடங்கின. ஆடுகளை காரில் திருட வந்த மர்ம நபர்கள் கற்களை வீசி நாய்களை அங்கிருந்து விரட்டி அடித்துவிட்டு இறைச்சிக் கடையில் இருந்த ஆடு மற்றும் முயல் பணத்தையும் திருடிச் சென்ற விதம் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் இறைச்சிக் கடை ஒன்றில் இரண்டு ஆடுகள் முயல் மற்றும் பணம் திருடு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.