அரசை வெளியில் விமர்சிப்பதை உடன் நிறுத்துங்கள்! கோட்டாபய உத்தரவு.

“அரசுக்குள் முரண்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதனை உள்ளேயே தீர்த்துக்கொள்ளுங்கள். வெளியில் விமர்சிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்.”
இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், விவசாயிகளின் உரம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை, அரசுக்குள் சில தரப்பினருக்கிடையே நிலவும் கருத்து மோதல்கள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டன.
இதன்போது, ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் அது தொடர்பில் வெளியில் விமர்சனங்களை முன்வைக்காது, உள்ளேயே அவற்றை தீர்த்துக்கொண்டு ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார் என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ஊடகங்களிடம் தெரிவித்தார்.