யாசகர்கள் பிரச்சினையைத் தீர்க்க உரிய வேலைத்திட்டம் தேவை!
சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இருப்பதன் அவசியம் தொடர்பில் அரச கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை ஆராயும் நோக்கில் கோபா குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
அமைச்சுக்களின் விடயப்பரப்புகளை தயாரிக்கும் போது தரப்படுத்தல் காணப்படுவது அவசியம் என்று இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
அங்கவீன குழந்தைகளுக்காக சேவைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட ரீதியில் நிறுவனங்களை ஸ்தாபிப்பதன் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளித்தல், அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் சமூகமயப்படுத்தல் செயற்பாடுகளை ஒரு நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தும் தேவையையும் குழு சுட்டிக்காட்டியது.
நீண்ட காலமாக சமூக சேவைகள் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
சமூக சேவைகள் திணைக்களம், மாகாண சமூக சேவைகள் திணைக்களத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுவது முக்கியமானது எனவும் குழு உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர்.
யாசகர்கள் அதிகரிப்பது ஒரு தேசிய பிரச்சினை எனவும், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய வேலைத்திட்டம் தேவை எனவும் குழுவின் கருத்தாக இருந்தது. அதனைத் தீர்ப்பதற்கான கூட்டு வேலைத்திட்டத்தின் அவசியம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வுகளின் முடிவுகளை சமூக சேவைகள் திணைக்களத்துக்கு பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது எனவும் குழுவின் கருத்தாக இருந்தது. சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டுவரும் 08 தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு சொந்தமான 22 ஹெக்டயர் காணிகளை அந்தத் திணைக்களத்துக்கு கையகப்படுத்தாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சமூகத்தில் உள்ள அனைத்து அங்கவீன நபர்கள் தொடர்பிலும் சரியாகக் கண்டறியக்கூடிய தேசிய தரவு அமைப்பொன்று இதுவரை இல்லாமை குறித்து குழு சமூக சேவைகள் திணைக்களத்திடம் தகவல் கோரியது. அவ்வாறு காணப்பட்டாமை தேசிய கொள்கை வகுப்புக்கு பாரிய தடையொன்றாக இருப்பதாக குழு சுட்டிக்காட்டியது. 121 மில்லியன் ரூபா செலவு செய்து மட்டக்களப்பு தொழிற் பயிச்சி நிலையம் அமைக்கப்பட்டிருந்தாலும், அந்த கட்டடத்தை பயன்படுத்தாமை தொடர்பில் குழு விசேட கவனம் செலுத்தியது.
அந்த நிலையத்தின் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார்.
சமூக சேவைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்காக முறையான வகையில் தன்னார்வ தொண்டர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் குழு பரிந்துரைத்தது.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷன் பெரேரா, அஷோக் அபேசிங்க, சிவஞானம் சிறீதரன், வைத்தியர் உபுல் கலப்பத்தி, பி.வை.ஜி. ரத்னசேகர, வீரசுமன வீரசிங்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுனேத்ரா குணவர்தன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்தக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.