பண்டிகைகளை எச்சரிக்கையாக கொண்டாடுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
அண்டை நாடான சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், பண்டிகை காலத்தையொட்டி மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் கண்டறியப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா பின்னர் உலகம் முழுவதும் பரவி பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றுக்கு கட்டுக்குள் இருந்து வந்தது. தற்போது சீனாவில் மீண்டும் தொற்று அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அந்நாடு மீண்டும் விதிக்க தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியதுள்ளதால் இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றுபரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை விடா முயற்சியுடன் பின்பற்றாததன் காரணமாகவே தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி மத்திய அரசு கேட்டுகொண்டுள்ளது. பண்டிகைகளை எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடும்வகையில் வழிமுறைகளை கடுமையாக அமல்படுத்துதல் வேண்டும், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலும், 5% க்கும் அதிகமான கோவிட்-19 சோதனை உறுதிப்படுத்தல் விகிதங்களைப் புகாரளிக்கும் மாவட்டங்களிலும் மக்கள் கூடுவதை அனுமதிக்கக் கூடாது.
பண்டிகைகளின் போது எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் முன்கூட்டியே போதுமான அளவில் வழங்க வேண்டும். முன்கூட்டிய அனுமதி வழங்கப்பட்ட மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுடன் கூடிய கூட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகள் மீறப்படும்போது அபராதம் விதிப்பது போன்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.