உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 நாட்களில் 10 பேர் உயிரிழப்பு
மலையேற்றத்திற்காக ஆர்வமுடனும், புதிய அனுபவம் தொடர்பான மிகுந்த எதிர்பார்ப்புடனம் சென்ற போது, திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில், சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்வதில் மலையேற்ற பயணமும் ஒன்று. வெண்பனி போர்த்திய மலைகளுக்கு மத்தியில் கால்கள் புதைய நடந்து சென்று. இயற்கை அழகை ரசிப்பதே அலாதி சுகம் தான்.
ஆனால், அழகென்றாலே ஆபத்து என்பதற்கு ஏற்றவாறு, இங்கு அவ்வப்போது ஏற்படும் பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் உத்தராகண்டில் பெய்த கனமழை காரணமாக, உத்தர்காஷியில் உள்ள நிலபானி மற்றும் பகேஷ்வரின் பிண்டாரி பனிப்பாறை பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில், மலையேற்றக்காரர்கள் மற்றும் போர்ட்டர்கள் என, 18 பேர் மாயமாகினர். மீட்பு பணியில் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தேவையான உபகரணங்கள், சரியான வழிகாட்டி மற்றும் உயரமான மலையேற்றத்தில் போதிய அனுபவம் இல்லாதது ஆகியவை, இந்த உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு என உத்தராகண்டில் எந்த வித விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை என கூறப்படுகிறது. மலையேற்றத்தின் பெரும்பாலான வழிகள் காட்டுப்பாதையாக இருந்தாலும், காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படுவதில்லை.
உத்தராகண்டில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிகரங்களில், 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மலையேற்ற பாதைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் மிகுந்த ஆர்வத்துடன், இங்கு மலையேறும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு இல்லாததால், இந்த சாகச பயணமே பலரின் இறுதி பயணமாக மாறிவிடுவதே சோகம் நிறைந்த உண்மையாக உள்ளது.