இரசாயன உரம் பெற்றுத் தருமாறு கோரி போராட்ட ஊர்வலம்.

விவசாயிகள், விவசாய அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலியின் தலைமையில் யூரியா இரசாயன உரம் பெற்றுத் தருமாறும் அதிகரிக்கப்பட்ட பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறும் வலியுறுத்தி போராட்ட ஊர்வலம் இன்று(26) சம்மாந்துறையில் இடம்பெற்றது..
சம்மாந்துறை விளினையடி சந்தியில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் நடை பவனியாக ஹிஜ்ரா சந்தி ஊடாக சுமார் இரண்டு கிலோமீட்டர் நடை பவனியாக சென்று சம்மாந்துறை பிரதேச செயலகம் வரை சென்றது.
இதன்போது பட்டம்பிட்டி வயல் பிரிவு குழுத்தலைவர் மற்றும் ப்ளாக் ஜே வயல் பிரிவு குழுத்தலைவர் ஆகியோரால் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கும் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது மகஜரில் உள்ள விடயங்கள் வாய் மொழிந்தும் காட்டப்பட்டது. இந்த மகஜரில் விவசாயிகளின் அடிப்படை தேவையான இரசாயன உரத்தினை பெற்றுத்தருமாறு குறித்த அதிகாரிகளுக்கு
எழுத்து மூலம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி, முன்னாள் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தற்போதைய மாகாணசபை தவிசாளர் சந்திரதாச களபதியும், ஓய்வுபெற்ற மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரியும் வயல் பிரிவு குழுத்தலைவருமான உதுமாலெப்பை பலரும் கலந்துகொண்டனர்.