அடிப்படைவசதியற்ற நிலையில் குடிசையில் வாழ்ந்த குடும்பத்திற்கு நிரந்தர வீடு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் வறிய நிலையில் எந்த அடிப்படைவசதியும் அற்ற நிலையில் குடிசையில் வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்றினை கட்டிவழங்குவதற்கான ஏற்பாட்டினை சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துள்ளது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் களிமண் வீட்டில் யானைகளின் அட்டகாசத்திற்கு மத்தியில் சிறுகுழந்தைகளுடன் வாழும் குடும்பத்திற்கே இந்த வீட்டினை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிநிதிகள் இப்பகுதியில் கள விஜயத்தினை மேற்கொண்டபோது குறித்த குடும்பத்தின் நிலைமை தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு அவை சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதனை தொடர்ந்து சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் துரைநாயகத்தின் முயற்சியினால் சுமார் ஆறு இலட்சம் ரூபா செலவில் குறித்த வீட்டினை அமைத்துக்கொடுப்பதற்கான பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் மட்டக்களப்பு இணைப்பாளர் றொமிலா செங்கமலன் தலைமையில் இந்த வீட்டினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.
மூன்று குழந்தைகளுடன் கூலித்தொழில்செய்துவரும் குடும்பத்தினர் நீண்டகாலமாக களிமண் வீட்டில் வசித்துவந்த நிலையில் சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக அவர்களுக்கான வீடு அமைத்துக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டதற்கு அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.