தோல்வியடைந்த அரசு வீடு செல்வதே உத்தமம்! திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்து

“அரசு தோல்வியடைந்ததை அரசில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளே கூறத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலையில் அரசுக்குள் நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே, இந்த அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் நாட்டுக்குத்தான் பேரழிவு.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஊடங்களின் வெளியாகியிருந்ததை நாம் அவதானித்தோம்.
அதுமட்டுமன்றி ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணி கட்சிகள், அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
விசேடமாக அரசில் அங்கம் வகிக்கும் சுசில் பிரேமஜயந்த கடுமையான விமர்சனம் ஒன்றை அரசுக்கு எதிராக முன்வைத்தார். இந்த அரசு தோல்வியடைந்து விட்டது என அவர் கூறினார்.
அரசு எடுத்த அனைத்துத் தீர்மானங்களும் தோல்வியடைந்துவிட்டன என்று அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
அரசின் தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளதை, அரசில் அங்கம் வகிப்பவர்களே புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர்.
நாடு மிகவும் மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசில் அங்கம் வகிப்பவர்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளமை தெளிவாகியுள்ளது.
இந்த அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் நாட்டுக்குத்தான் பேரழிவு” என்றார்.