கவிழப்போகும் அரசுடன் இணையமாட்டேன்!எம்.பி. ஹேஷா திட்டவட்டம்.
“இந்த அரசின் கதை முடியப்போகின்றது. அரசை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். எனவே, இப்படியானதொரு அரசியல் நான் இணையமாட்டேன்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அறிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியை நான் இராஜிநாமா செய்தது உண்மையே. இது தொடர்பில் செயலாளருக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். பிரச்சினைகள் தொடர்பில் கட்சிக்குள் பேச்சு நடத்தி தீர்வைப் பெற முற்பட்டேன்.
எனினும், இந்த விடயத்தை ஊடகங்களில் அம்பலப்படுத்தியது யார்? ஐக்கிய மக்கள் சக்திக்குள் சூழ்ச்சிக்காரர்கள் உள்ளனர். அவர்களை சஜித் பிரேமதாஸ இனங்காண வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முன்னோக்கி பயணிக்கவிடமாட்டார்கள். அன்று ரணிலுடன் இருந்து ‘டீல்’ அரசியல் செய்தவர்கள் இன்று எமது அணியிலும் உள்ளனர்.
இந்த அரசின் கதை முடியப்போகின்றது. இது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும். நிலைமை அப்படி இருக்கையில் நான் எப்படி அரசியல் இணைவேன்? மக்களுக்கான எனது அரசியல் பயணம் தொடரும். மக்களுடனேயே எனக்கு ‘அரசியல் உடன்படிக்கை’ உள்ளது” – என்றார்.