பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி!

டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி ஹாரிஸ் ராவுஃபின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே, டரில் மிட்செல் தலா 27 ரன்களைச் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் பாபர் ஆசம் 9 ரன்களில் டிம் சௌதி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஃபகர் ஸமான், முகமது ஹபீஸ், இமாத் வாசிம் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வானும் 33 ரன்களில் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு அதிகரித்தது.
அதன்பின் ஜோடி சேர்ந்த சோயிப் மாலிக் – ஆசிஃப் அலி இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.