பெகாசஸ் விவகாரம் : இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்
பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் பிரபலங்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக, விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி அரசியல் பிரபலங்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 முக்கிய நபர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, உச்சநீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் பலர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
அப்போது, பெகாசஸ் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில், மத்திய அரசு சொந்த மக்களைக் கண்காணித்ததா, இல்லையா என்பதை மட்டும் தெரிந்துகொள்ள இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது.